×

437 பயனாளிகளுக்கு ₹3.20 கோடியில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல், ஆக.4: கொல்லிமலையில் நடந்த வல்வில் ஓரி விழா நிறைவு விழாவில் 437 பயனாளிகளுக்கு ₹3.20கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த இரண்டு நாட்களாக வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா நடைபெற்றது. ஓரிவிழாவின் நிறைவு விழா நேற்று மாலை கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் மருத்துவர் உமா தலைமை வகித்து பேசினார். பொன்னுசாமி எம்எல்ஏ முன்னிலை வகித்து பேசினார். விழாவில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில், 437 பயனாளிகளுக்கு ₹3.20கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் உமா, எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் வழங்கி பேசினர். வில்வித்தை போட்டிகள் வெற்றி பெற்ற வீரர்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலைகுழுவினர் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு, சிறந்த அரங்கங்கள் அமைத்த அரசு துறையினருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கப்பட்டது.

சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலியாட்டம், மயிலாட்டம், மான்கொம்பு, பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், பரத நாட்டியம், தெருகூத்து, சேர்வை ஆட்டம், சுற்றுலா முக்கியத்துவம் குறித்த நாடகம், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தது.
கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், வருவாய் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ₹4.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறை சார்பில் 96 பயனாளிகளுக்கு ₹1.23 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ₹64.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டம் சார்பில் 14 பயனாளிகளுக்கு ₹98.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ₹28.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ₹69,150 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ₹843 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ₹17,960 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 45 பயனாளிகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 138 பழங்குடியின மாணவிகளுக்கு ₹50ஆயிரம் மதிப்பில் ஸ்வெட்டர்களையும் என மொத்தம் 437 பயனாளிகளுக்கு ₹3.20கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட 17 பள்ளிகளை சேர்ந்த 427 மாணவ, மாணவியர்களுக்கும், 360 கலைஞர்களுக்கும், பணிவிளக்க கண்காட்சியில், சிறப்பாக அரங்கம் அமைத்ததற்காக முதல் பரிசு வனத்துறை அரங்கிற்கு கிடைத்தது. 2ம் பரிசு காவல் துறைக்கும், 3ம் பரிசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் ஆகிய துறைகளுக்கும் வழங்கப்பட்டது. வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு கலெக்டர் உமா பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, துணை இயக்குநர் கணேசன், மாவட்ட மேலாளர் ராமசாமி, பழங்குடியினர் திட்ட அலுவலர் பீட்டர், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் திருமுருகன், உதவி இயக்குநர் முத்துப்பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், அத்மா குழுத்தலைவர் செந்தில் முருகன், தாசில்தார் அப்பன்ராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 437 பயனாளிகளுக்கு ₹3.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Valvil Ori festival ,Kollimalai ,Dinakaran ,
× RELATED தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிப்பு..!!